பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 13 ஜனவரி, 2023

குழந்தைகளைத் தூங்க விடுங்கள்!


நாம் தூங்குவதற்கு நம்முடைய மூளையில் ‘மெலடோனின்’ என்ற சுரப்பி சுரக்கிறது. நாம் முப்பது வயதைக் கடக்கும் போது, இச்சுரபி சுரப்பது நாம் குழந்தைகளாக இருக்கும் போது சுரப்பதைவிட ஐம்பது சதவீதம் குறைகிறது.

இதனாலேயே வயதானவர்களுக்கு தூக்கம் அதிகம் கெடுகிறது.

இதற்கு இன்னொரு பெயரும் உண்டு.

‘டிராகுலா சுரப்பி ‘

இந்த டிராகுலா சுரக்க வேண்டுமானால் இருள் அவசியம்.

நமது தூக்கமே மெலடோனின் மூலம்  தான் ஆற்றல் பெறுகிறது. நம்முடைய உடலில் ஏற்படும் பல தீமையான விசயங்களை இது கட்டுப்படுத்துகிறது. இச்சுரபி சுரக்காவிட்டால் உடலில் பல கேடுகள் வந்து சேரும். 

சுரக்காவிட்டால் என்ன ?

உணவில் எடுத்துக் கொள்ளலாமே!

எடுத்துக் கொள்ளலாம்.

1 – 2 மில்லி கிராம்,  மெலடோனின் கிடைப்பதற்கு நீங்கள் 1,152,000 கப் பால் அருந்த வேண்டியிருக்கும் அல்லது 4,500 செர்ரிப் பழங்களை உண்ண வேண்டியிருக்கும்.

இவ்வளவு சிரமப்பட்டு கிடைக்கும் இச்சுரபி, இரவில் விளக்கை அணைத்து விட்டால் இலவசமாகவே கிடைத்து விடும்.

இலவசமாகவே கிடைக்கும் ஒன்றை ஏன் சிரமப்பட்டு தேட வேண்டும்!

இப்போது குழந்தைகள் சீக்கிரம் தூங்காவிட்டால், முதுமையில் அவர்களுக்கு இரவு தூக்கம் எனபது பகல் கனவாகவே ஆகிவிடும். அதனால் குழந்தைகளை சீக்கிரம் தூங்க வைப்போம். 

ref: https://www.indiatoday.in/health/story/have-trouble-sleeping-this-could-be-the-reason-2316371-2023-01-02

படம் : wikicommons


புதன், 11 ஜனவரி, 2023

காந்தம் எப்படி வந்தது?



ஒரு காலத்தில், சீனர்களும் கிரேக்கர்களும் ஒரு சில அதிசய கற்களைப்பற்றி அறிந்து வைத்திருந்தனர். 


ஏதாவது, ஒரு உலகத்தை அதன் அருகே கொண்டுப்போனால், அதில் ஒட்டிக் கொள்ளும்.


ஓ, இதுதான் காந்தமா! என்று சிந்தித்த வரலாற்றுப் பதிவு இது.


அதன்பிறகு, அப்படியே சிறு ஊசிகளை அதன் மீது தூக்கி எறிய, அவ்வளவுதான், ஊசிக்கு சிறிது நேரம் காந்த தன்மை வந்து விடும்.


பிறகு என்ன? ஊசியை ஒரு நூலில் கட்டி தொங்க விட்டால், வடக்கு – தெற்காக நிற்கும்.


அட இது என்ன பெரிய அதிசயமா இருக்கே, என்று சிந்தித்த அழகிய காலம் அது.


சரி, அந்தக்கல் எப்படி காந்தமாக இருந்தது.


‘அட, மின்னல் விழுந்துச்சுல அதனாலதான்’ என்று அவர்கள் நம்பிக்கொண்டிருந்தார்கள்.

உலகத்தின் முதல் கண்ணாடி எதுவாக இருக்கும்?

 

நிச்சயம் தண்ணீர் தான்.


வரலாற்றில், முதல் கண்ணாடிக்கான பதிவு ரொம்பவும் சூடானது. ஆம்! துருக்கி தேச மக்கள், கண்ணாடி போல் பிரதிபலித்துக் கொண்டிருந்த எரிமலை பளிங்குப் பாறைகளை, முகம் பார்ப்பதற்கும், தலை சீவுவதர்க்கும் பயன்படுத்திக் கொண்டிருந்தனர்.


எல்லாவற்றையும் மக்கள் எளிதாக ஏற்றுக் கொள்ளவில்லை. 1970 களில் பழங்குடியின பயாமி மக்களுக்கு ஒரு கண்ணாடியை அறிமுகப்படுத்தியபோது, பயந்து ஓட ஆரம்பித்தனர்.    


கண்ணாடி உடைந்தால் அடுத்த ஏழு வருடங்களுக்கு வீட்டிற்கு ஆகாது என்ற மூட நம்பிக்கையும் இருந்தது.


கண்ணாடியின் வரலாறும் எல்லா சோதனைகளையும் கடந்தே இன்று ஒவ்வொரு வீட்டிலும் அலமாரிகளை அலங்கரித்துக் கொண்டிருக்கிறது.

வானத்தில் ஒரு ஆப்பிள் மரம்!



நியூட்டனின் மேல் ஒரு ஆப்பிள் விழுந்தது  அனைவருக்கும் தெரியும். அதற்குப்பிறகு, அவர் புவி ஈர்ப்பு விசயைக் கண்டுபிடித்ததும் நமக்குத் தெரியும்.


நியூட்டனின் இக்கண்டுபிடிப்பைக் கொண்டாடும் விதமாக, அதே ஆப்பிள் மரத்தின் நான்கு அங்குலப் பகுதியை வெட்டி எடுத்து, கடந்த 2020 ஆம் ஆண்டு நாசாவின் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு, அட்லாண்டிஸ் என்ற விண்கலத்திலிருந்து கொண்டு செல்லப்பட்டது. 


இதில் வினோதமான நிகழ்வு என்னவென்றால், இங்கிருந்து கொண்டுசெல்லப்பட்ட, ஆப்பிள் மரத்துண்டில், ஆப்பிள் இருந்தாலும் அது கீழே விழாது.


ஏனெனில் அங்கேதான் புவி ஈர்ப்பு விசை இல்லையே!


courtesy : https://amp.theguardian.com/science/2010/may/09/isaac-newton-apple-tree-space


TELL ME WHY magazine published by Manorama February 2021 page No.38

பல்லுக்குள் கல்!



‘உலகத்தின் பழமையான ரத்தினக் கற்கள் எது தெரியுமா?


‘ லாபிஸ் லாசுலி ‘ எனும் நீலக்கற்கள்


சுமார், 4000 ஆண்டுகளுக்கு முன்னர், வாழ்ந்த ஹரப்பா, மொகன்ஜதரோ சிந்து சமவெளி நாகரீக மக்கள், இந்த ஆபரணக் கற்களுக்காக, சுமார் 1900 கிலோ மீட்டர்கள் தூரம் மலைப்பதைகளையும், உயரமான குன்றுகளையும் கடந்து பயணம் செய்திருக்கிறார்கள். அங்கே, அக்கற்கள் கிடைக்கும் ‘ சர்துகாய் ’ எனும் இடத்தில் குடியிருப்புகளையும் அமைத்திருக்கிறார்கள். 


நாம் பார்த்து வியக்கும் பல பண்டைய எகிப்திய உருவங்களில் இக்கற்கள பதிந்து வைக்கப்பட்டுள்ளன. சில பிரமிடுகளின் அணிகலன்களையும் இக்கற்கள் அழகுபடுத்தியுள்ளன. 


சமீபத்தில், ஆயிரம் வருடங்களுக்கு முன்பாக, ஜெர்மன் நாட்டின் அகழ்வாராய்ச்சியில், பற்களுக்கு கீழ்பகுதியில் இக்கற்களின் துகள் ஒன்று பதிந்திருந்தபடி எலும்புகூடு கிடைத்தது. இக்கால கட்டங்களில் இக்கற்களைப் பொடியாக்கி வானம் போன்ற படங்களுக்கு வண்ணம் தீட்டும் வழக்கம் இருந்தது. அவ்வாறு தீட்டும் வேளையில், பிரஸ்ஸை, கூர்மையாக்க, வாயில் மெல்ல இழுப்பார்கள். அந்நேரத்தில், இக்கற்கள் அப்பெண்ணின் வாயில் சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

படங்கள் Wikicommons

எல்லைக் குகை



வார்த்தையே சிறிது வசீகரமாக இருக்கும். சுமார் 44,000 ஆண்டுகளுக்கு முன்பு, தென் ஆப்பிரிக்க நாட்டின் எல்லையோரத்தில் அமைந்துள்ள  ஆதி மனித இருப்பிடத்தின் இன்றைய பெயர்.


இக்குகையின் கண்டுபிடிப்புகள் நமக்குத் தெரிந்தபடி பழமையான மனித நடத்தையைக் காட்டுகின்றன என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

உயரமான இருப்பிடத்தில் அமர்ந்து கொண்டு சூடாக ஒரு தேநீர் அருந்துவதற்கு தோதான இடமென்று, அன்றைய மனிதன் இவ்விடத்தை தேர்ந்தெடுத்திருப்பான் போல. ஆராய்ச்சியாளர்கள் அவனது தங்குமிடத்தைக் கண்டு இன்றும் வியக்கிறார்கள் மணிகள், அம்புக்குறிகளுக்குப் பயன்படுத்தப்படும் கூர்மையான எலும்புப் புள்ளிகள் சிவப்பு-களிமண் என்று இன்றைய நவீன உலகின் பழக்க வழக்கங்களை ஒட்டிய சிந்தனையுடையவர்கள் எல்லைக் குகைவாசிகள்.


உலகின் பழமையான் விஷமும் இங்கேதான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


உலகின் நம் ஒவ்வொருவரின் மூதாதையர்களும் ஆப்பிரிக்காவிலிருந்து தான் வந்தார்கள் என்று மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள். இதை ஆராய்சிக்கு எடுத்துக்கொண்ட ஆய்வாளர்கள். 


படம் : wikicommons

‘ கூட்டல் கழித்தல் ‘ குதிரை !



வில்ஹெம் வான் ஓஸ்டன். ஒரு கணக்கு வாத்தியார். அவருக்கு ஒரு வித்தியாசமான ஆசை. எத்தனை நாளைக்குத்தான் குழந்தைகளுக்கு பாடம் எடுப்பது. ஏதாவது புது முயற்சி எடுக்கலாமே என்று ஒரு குதிரையை விலைக்கு வாங்கி வந்தார்.


வாங்கி வந்தவர் அதற்கு புற்கள் கொடுத்து பந்தயத்திற்கு அனுப்பி இருக்கலாம். அவர் அதைச் செய்யாமல் அதற்கு எண் கணிதம் சொல்லிக் கொடுக்கத் தொடங்கினார். 


தொடக்கத்தில் சில வகுப்புகளை குதிரை ‘ கட் ‘ அடிக்கவே செய்தது. ஆனால், அவர் விடவில்லை. விடாமல் பின் தொடர்ந்தார். சிறிது நாட்களில் நல்ல பலனும் கிடைத்தது. குதிரை நான்கு வருடங்களில் அடிப்படைக் கணிதத்தை நிறைவு செய்தது. 


ஊரைக் கூட்டி தன் வீட்டிற்கு முன் நிறுத்தினார் ஓஸ்டன்.

கேள்விகள் பாய்ந்தன.


கூட்டல் கணக்கு. 


குதிரைக்கு இடது புறத்தில் 5 பொருட்களும் வலது புறத்தில் 3 பொருட்களும் வைக்கப்பட்டது குதிரை பொருட்களை ஒருமுறை பார்த்து விட்டு தரையை எட்டு முறை தட்டியது. விடை 8 என்பது அதன் அர்த்தமாகும்.


பின்னக் கணக்குகளையும் அக்குதிரை செய்தது. 2/5 மற்றும் 1/2 கூட்டி, முதலில் ஒன்பது முறையும், அடுத்து பத்து முறையும் தரையைத் தட்டியது. விடை 9/10 என்று புரிந்து கொள்ளலாம்.


இது மட்டுமல்ல, இது போன்ற பல திறமைகளை உள்ளடக்கியிருந்தது அக்குதிரை. இச்சமபவம் கி. பி 1904 ஆம் ஆண்டு ஜெர்மனியில் நடந்தேறியது. 


இது ஏதோ கண் கட்டி வித்தை என்று இதைச் சோதிக்க  ஒரு தனியாக வல்லுனர்கள் சுழுவும் அமைக்கப்பட்டது 

அவர்களின் முடிவு என்ன தெரியுமா?


இது ஏமாற்று வேலை அல்ல. ஆசிரியரின் கடின உழைப்பினாலும், குதிரைக்கு கொடுக்கப்பட்ட பயிற்சியாலும் இது சாத்தியமாகி இருக்கிறது என்று அறிக்கை சமர்பித்தது அக்குழு.


‘ எறும்பு ஊறக் கல்லும் தேயும் ‘ என்றது கணிதக் குதிரை. 


ref ; The Number Sense, Stanislas Dehaene How the Mind Creates Mathematics, OXFORD UNIVERSITY PRESS.  


படம் : wikicommons